அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாக வாய்ப்பு

57

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டெம்பர் 30ஆம் திகதி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றில் 14 மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் எதிர்வரும் 17ஆம் திகதி ஓய்வு பெறுகின்றார். அதற்கு முன்பதாக அயோத்தி வழக்கில் எதிர்வரும் 13ஆம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதென உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தள்ளது.

இதன் காரணமாக உத்தரப்பிரதேசம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயோத்தி தீர்ப்பைக் கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த 1ஆம் திகதி முதல் பொலிசார் விடுமுறை எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விடுப்புத் தடை வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி உட்பட முக்கிய நகரங்களில் மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லி, மாநிலங்களின் தலைநகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.