சட்டத்தை வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை – திருமா , வழங்கப்பட்டது தீர்ப்பு தானே ஒழிய, நீதியல்ல – சீமான்

0
68

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “பாபர் மசூதி வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது.

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் அகழ்வாய்வில் அங்கே கோவில் எதுவும் இல்லை என்னும் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம்தானே. சாஸ்திரங்களின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இசுலாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் முயற்சியாக இல்லாமல் சமரச முயற்சியாகவே தெரிகிறது. ராமர் கோவிலை கட்டுவதற்கு மைய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல பாபர் மசூதியை கட்டுவதற்கும் ஏன் அறக்கட்டளையை நிறுவக் கூடாது? ” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து சீமான் கூறியதாவது, அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல, பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம் என்றும், பாபர் மசூதி இடிப்பென்பது இசஸ்லாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here