அம்பிகாவுக்கு நியமனம் ; தமிழரசு மகளிர் அணி போர்க்கொடி

140
63 Views

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக நிற்க மகளிர் அணி சார்பாக விண்ணப்பித்த இருவரை நிராகரித்து விட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மாலை கூடிய கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்காக கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் மிதிலா சிறிபத்மநாதன், எஸ்.விமலேஸ்வரி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். எனினும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழு அவர்களது விண்ணப்பங்களை
நிராகரித்து மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் துணைவி- யார் சசிகலா ரவிராஜ் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள்
உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் ஆகியோரைக் களமிறக்கத் தீர்மானித்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மகளிர் தினநிகழ்வையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாகக் கூடிய கட்சியின் மகளிர் அணியைச்சேர்ந்த ஒரு பகுதியினர், மனித
உரிமைகள் செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கத் திட்ட மிட்டுள்ளதைக் கடுமையாக எதிர்த்தனர்.

இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தி நிறுவனம் ஒன்று பின்வருமாறு தகவல் வெளியிட்டது:-

இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் இண்டு கொழும்பு பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் கூட்டாக கட்சித் தலைமையைச் சந்தித்துத் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தனர்.

ஞாயிறு பகல் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து அவர்கள் தமது அதிருப்தியை தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ அறிமுகமற்ற அம்பிகா போன்றவர்களை எதற்காக வேட்பாளராக்க வேண்டும், பெண் வேட்பாளர்கள் இருவரும் இதுவரை கட்சி அங்கத்துவத்தையே பெற்
றிருக்கவில்லை, தமிழ் மக்களின் போராட்டங்களில் எதில் அம்பிகா பங்கேற்றார் என காரசாரமான பல கேள்விகளை இதன்போது அவர்கள் எழுப்பினர்.

இதன்போது, அங்கு அசெளகரியமான சூழல் ஏற்பட்டது. பின்னர், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவைச் சந்தித்து தமது அதிருப்தியை அவர்கள் தெரிவித்தனர். அத்துடன், எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் நடந்த அசெளகரியமான சூழல் குறித்தும் முறையிட்டனர்.

நிலைமையை சமாளித்த மாவை சேனாதிராசா, மகளிர் அணியினரிடம் மனவருத்தத்தை பதிவுசெய்தார். அத்துடன், வேட்பாளர் தெரிவு இறுதியாகவில்லை,
எதிர்வரும் 12 ஆம் திகதி அவர்களது கோரிக்கையை மீளவும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்’ இப்படி அந்தச் செய்தியில் தெரிவிக்கபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here