அமெரிக்காவுடன் சீனா உடன்பாடு வர்த்தகப் போர் முடிவிற்கு வருகின்றது

92

அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே நடந்து வரும் வணிகப் போர் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கப் பொருட்கள் மீதான புதிய வரிவிதிப்புகளை படிப்படியாக குறைக்க சீனா அமெரிக்காவுடன் உடன்பட்டுள்ளதாக சீன வர்த்தக அமைச்சகம் இன்று தெரிவித்தது.

அமெரிக்க-சீன இடைக்கால ஒப்பந்தம் டிசம்பர் 15ஆம் திகதியன்று கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் அமெரிக்காவும் சீன கணினிகள், லப்டொப்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் பொம்மைகள் மீதான சுமார் 150 பில்லியன் டொலர்கள் கட்டணங்களை இரத்துச் செய்வதாக உறுதி அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் என்ற ஒன்று எட்டப்பட்டால் அதில் முக்கியமாக பரஸ்பர வரிவிதிப்புகளைக் குறைப்பது பிரதான அங்கமாகும். அப்போது தான் முதற்கட்ட வாணிப ஒப்பந்தமே சாத்தியம் என்று சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால் கட்டணக் குறைப்பிற்கான காலவரையறை எதையும் சீனா தெரிவிக்கவில்லை. முதற்கட்டமாக இரு நாடுகளும் பரஸ்பர கூடுதல் கட்டண விதிப்புக்களை அகற்றுவதற்கான ஒப்பந்தம் இந்த மாதம் பெயர் குறிப்பிடாத இடத்தில் அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜீ ஜீன்பிங்கிற்கும் இடையே நடைபெறும் என்று இருதரப்பிற்கும் நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டிசம்பர் 3ஆம் 4ஆம் திகதிகளில் நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப் கலந்து கொள்ள வரும் போது இரு தலைவர்களும் இந்த முதற்கட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.