அமெரிக்காவில் தாலிபன்கள் உடனான சந்திப்பை ரத்து செய்தார் – டிரம்ப்

107

தலிபான்களின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை (நேற்று) சந்திக்கவிருந்ததாக” டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படை வீரர் ஒருவர் கொல்லப்பட்ட அண்மையில் இடம்பெற்ற காபுல் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றதை அடுத்து தமது கேம்ப் டேவிட் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை (இன்று) கொள்கை அளவில் தலிபான்களுடன் அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவது குறித்த அறிவிப்பை அமெரிக்க பேச்சுவார்த்தையாளரான சல்மே கலில்சாத் குறிப்பிட்டிருந்தார்.

கட்டார் தலைநகர் டோஹாவில் தலிபான்கள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்படிக்கை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தது.

“துரதிருஷ்டவசமாக, எமது சிறந்த படையினர் கொல்லப்பட்ட காபுல் தாக்குதல் ஒன்றுக்கு (தலிபான்கள்) பொறுப்பேற்றது தவறான எண்ணத்தை கட்டியெழுப்புகிறது” என்று ஜனாதிபதி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“நான் இந்த சந்திப்பையும் அமைதி பேச்சுவார்த்தைகளையும் உடன் ரத்துச் செய்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தாக்குதலில் ஒரு அமெரிக்க படை வீரர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். நேட்டோ படையில் இருந்த ருமேனிய வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். தாலிபன் அமைப்புடன் செய்துகொள்ள முன்மொழியப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி 20 வாரங்களுக்குள் 5,400 படையினரை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.

எனினும் அமெரிக்க துருப்புகளை முன்கூட்டியே வாபஸ் பெறுவது குறித்து ஆப்கான் அரசு, அரசியல்வாதிகள் மற்றும் நிர்வகாத்தில் சில உறுப்பினர்களிடம் இருந்து அமெரிக்க ஜனாதிபதி அழுத்தத்திற்கு முகம்கொடுத்திருந்தார்.

2001 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆப்கானின் அதிக நிலப்பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்கள் வடக்கு நகரான குந்துஸ் மற்றும் புலே கும்ரி மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தியதோடு தலைநகர் காபுல் மீது இரு தற்கொலை தாக்குதல்களை நடத்தினர்.