அமெரிக்காவின் தடை உத்தரவை முறியடிப்பதில் சிறீலங்கா தீவிரம் – அவசர சந்திப்பு

நேற்று (16) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அலைனா தெப்லிஸ்யை அழைத்துள்ள சிறீலங்கா அரசு தனது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவின் அறிவித்தல் தொடர்பில் குணவர்த்தனா தனது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமையாக உள்ளபோதும், இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி சிறீலங்கா அரசு அமெரிக்க தூதுவரை அழைத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் அனைத்துலக நடைவடிக்கை பிரிவின் 7031சி பிரிவின் அடிப்படையில் இந்த தடையை கொண்டுவந்துள்ளதாக பொம்பியோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அமெரிக்காவின் அறிக்கை வெளிவந்துள்ளதாகவும், அது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுப்படுத்தலாம் எனவும் சிறீலங்கா அரசு அச்சம் அடைந்துள்ளதாக கொழும்பு வாரஏடு ஒன்று தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் தடை சிறீலங்காவுக்கான ஆயுத உதவிகள் படைத்துறை உதவிகளை தடை செய்யவில்லை எனவும், வேறு அதிகாரிகள் மீது தடை விதிக்கப்படவில்லை எனவும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.