‘அபிவிருத்தி என்ற பெயரில் சரணடைந்தால் விரைவில் தமிழரை தேடித் கண்டுபிடிக்கவேண்டிய நிலை ஏற்படும்'(நேர்காணல்)

‘அபிவிருத்தி என்றபெயரில் அரசாங்கத்திடம் சென்று சரணடைந்து விட்டோமானால், அதற்குப் பின்னர் அதிலிருந்து மீளமுடியாது. 15, 20 வருடங்களின் பின்னர், இப்போது இலங்கையில் பறங்கியரை எப்படி தேடிக் கண்டு பிடிக்கின்றோமோ அவ்வாறே தமிழர்களையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்’ என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தற்போது தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைவராகவும் இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்

தமது கட்சி தொடர்பாகவும், தமிழர் பாரம்பரியம் பற்றியும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும் தமது  நிலைப்பாட்டை விளக்கி   இலக்கு இணையத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.

கேள்வி –மக்களின் பல்வேறு விமர்சனத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள உங்கள் மாற்று அரசியல் தலைமை பற்றியும் அதன் அவசியம் பற்றி கூறுங்கள்?

உச்ச நீதிமன்றத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர் சுமார் பத்து வருடங்கள் மிகவும் சந்தோசமாக, மகிழ்வாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்த என்னை திடீரென வடமாகாண முதலமைச்சராக மாற்றி விட்டார்கள். அப்போது நான் அந்தப் பதவியையும் அதன் பொறுப்புக்களையும் எவ்வாறு ஏற்று நடத்தினேனோ அதேபோன்று தான் புதிதாக வந்திருக்கும் எனது பதவியை ஏற்று நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரையில் இது எனது கடமையின் ஒரு அங்கம். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே என்ற அடிப்படையில் எனது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருவதால், வருகின்ற கடமைகளை செய்து கொண்டே போவேன்.

கேள்வி –விடுதலைப் புலிகள் இயக்க காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கும், உங்களால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் தலைமைகளின் கொள்கைகளுக்கும் எவ்வாறான வேறுபாடு இருக்கின்றது?

விடுதலைப் புலிகள் காலத்தில் கட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டது அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அல்ல. சனநாயக ரீதியாக அவர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை கொண்டு நடத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் அது நடைபெற்றது.இவர்களை ஒன்று சேர்த்தது சனநாயக ரீதியாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும் என்பதற்காகவே.

ஆனால் 2009இன் பிற்பாடு எங்களுக்குக் கிடைத்த தலைமைத்துவம் கொள்கை ரீதியான எவற்றை தேசியத் தலைவர் எதிர்பார்த்தாரோ அவற்றை செய்யாது, அசட்டை செய்து வருகிறது. சனநாயக ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எந்தெந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் முறையாக சுயநலமின்றி  எடுத்துச் செல்வதே எமது கடமை.

கேள்வி – புதிதாக உருவாக்கப்பட்ட உங்கள் கூட்டணியில் ஒரு உறுப்பினரையேனும் பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியாது என்று சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார். அவரின் கருத்து தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?

எங்களைப் பற்றி அவர் கூறிய பல விடயங்கள் நடைபெறவில்லை. அவர் கூறியது சரியாக வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி –சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம் பலத்திற் கிடையில் முறுகல் நிலை தொடர்ச்சியாக காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த முறுகல் நிலையை உங்களால் ஏன் தீர்க்க முடியவில்லை? பிரச்சினையைத் தீர்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஏன் உங்கள் கட்சியில் இணைக்க முன்வரவில்லை?

இதை நீங்கள் கஜேந்திரகுமாரிடம் தான் கேட்க வேண்டும். இதற்கு நான் பதில் கூற முடியாது. ஏனெனில் ஒருகாலத்தில் தமிழ் மக்கள் பேரவையில் இவர்கள் இருவரும் எனக்கு பக்கத்தில் இருந்தார்கள். நாங்கள் கருத்தொருமித்து கொள்கை ரீதியாக ஒருமித்து செயற்பட்டோம். ஒருமித்து சில ஆவணங்களைத் தயாரித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்தோம். அப்போதெல்லாம் சுரேஷ் அண்ணா என்று கஜேந்திரகுமார் கூறுவார்.

ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை விடுங்கள் நாங்கள் வருகின்றோம் என்று சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவரை விலக்கி ஒருவரை சேர்த்துக் கொள்ள முடியாது. நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோம். அதேபோல் சேர்ந்து இயங்குவதானால், இப்போதும் அவரை ஏற்றுக் கொள்ள முடியும். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை.

கேள்வி –  போருக்கு பிந்திய காலப் பகுதியில் தமிழர் தாயகப் பகுதியில் மக்கள் அன்றாட வாழ்வாதார தேவைக்காவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மக்களின் போராட்டக் குணமும் உரிமைக்கான தாகமும் எவ்வாறு சாத்தியப்படும் என நினைக்கிறீர்கள்?

அதற்கு நாங்கள் எங்கள் புலம்பெயர் மக்களின் ஆதரவைப் பெற்று எல்லாவற்றையும் செய்து கொண்டு வந்திருக்கின்றோம். இப்பொழுதும் செய்கின்றோம். அந்த ரீதியில் எங்கள் மக்களின் பொருளாதாரம் மிகவும் வறுமைக் கோட்டிற்குள் இருப்பதன் காரணமாக அவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனித்தனியாக அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்தக் கொண்டு வந்திருக்கின்றோம். அதற்கு எங்கள் புலம்பெயர் மக்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்த அடிப்படையில் நாங்கள் அரசாங்கத்திடம் சென்று சரணடைந்து விட்டோமானால், அதற்குப் பின்னர் அதிலிருந்து மீளமுடியாது. 15, 20 வருடங்களின் பின்னர், இப்போது இலங்கையில் பறங்கியரை எப்படி தேடிக் கண்டு பிடிக்கின்றோமோ அவ்வாறே தமிழர்களையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.

இங்கு எல்லாமே சிங்களமயமாகி பௌத்தமயமாகி விடும். ஏனெனில் நீங்கள் பொருளாதார ரீதியாக உதவி பெறுமிடத்து, அவர்கள் பொருளாதாரத்தையும் தந்து கொண்டு தங்கள் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். கிளிநொச்சியில் பார்த்தால் சிங்கள பௌத்த சின்னங்கள் இப்போது இருக்கின்றது. எமது பகுதியில் ஒரு இலட்சம் வரையான இராணுவத்தினர் இருக்கின்றனர்.

எனவே இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டே நடவடிக்கையில் இறங்க வேண்டும். பொருளாதார ரீதியாக இராணுவத்தினர்கூட எமக்கு நன்மையளிப்பதாக கூறுகின்றார்கள். இவற்றிற்குள் நீங்கள் அகப்பட்டுக் கொண்டால், அதிலிருந்து மீள முடியாத ஒரு நிலை ஏற்படும். எனவேதான் நாங்கள் பாராளுமன்றத்தில் ஒருமித்து எங்கள் நடவடிக்கைகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 5 வருடகாலத்தில் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.ஒரேயொரு விடயத்தை அவர்கள் கூறியிருக்கலாம்.

அது என்னவெனின் எங்கள் அரசியல் கைதிகளை விடுவியுங்கள். அல்லாது போனால் அடுத்த முறை பாதீட்டில்(பட்ஜெட்) நாங்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று கூறியிருக்கலாம். அப்படி கூறியிருந்தால் அது நடைபெற்றிருக்கும். அதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது.

கேள்வி – அண்மையில் இலங்கையின் பூர்வீகக் குடிகள் சைவத் தமிழர்கள் என்ற உங்களின் கருத்து தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. கடந்த காலத்தில் உங்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த வடமாகாண ஆட்சிக் காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் புராதன சின்னங்கள் மற்றும் பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை பாதுகாக்க எவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டன?

எங்களுக்கு அவ்வாறான உரிமை தரப்படவில்லை. இவை தொடர்பான சகல உரிமைகளும் மத்திய அரசாங்கத்திற்குத்தான் இருக்கின்றது. 13ஆம் திருத்தச் சட்டத்திற்கமைவாக அது முழுமையாக மத்திய அரசிற்குரியது. எந்த வகையிலும் நாங்கள் அவற்றை மேற்கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றோம். பௌத்தம் இலங்கைக்கு வரும் போது அவர்களை வரவேற்றது தமிழ் சைவ அரசர்கள். இது சரித்திர ரீதியான உண்மை. அப்போது சிங்கள மொழி எந்த இடத்திலும் பேசவில்லை. சிங்களவர்கள் இருக்கவில்லை.

1300 அல்லது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சிங்கள மொழி நடைமுறைக்கு வந்தது. ஆகவே நான் சரித்திர உண்மைகளைக் கூறுகின்றேன். இதனால் பிரச்சினைகள் ஏற்படுகின்றதென்றால், மக்களுக்கு யார் இவற்றை எடுத்துக் கூறுவது?

இவ்வளவு நாளும் இவற்றை கூறாதபடியால்தான் சிங்கள மக்கள் எங்களை 10ஆம் நூற்றாண்டில் வந்த கள்ளத்தோணிகள் என்று கூறுகின்றார்கள். அது தவறானது. 10ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் தமிழர்கள் இங்கு வந்தது உண்மை. அதற்கு முன்னர் பாண்டியர்கள், பல்லவர்கள் என்று பலர் இங்கு வந்துள்ளனர்.
ஆதிக்குடிகள் தமிழ் மக்கள்.

அண்மையில் மட்டக்களப்பில் கி.மு 300 ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கப்பட்ட பல கண்டெடுப்புக்களிலிருந்து தமிழ் அந்தக் காலத்திலிருந்தது. சைவம் அந்தக் காலத்திலிருந்தது என்பதற்கு அடையாளம் இருக்கின்றது.

கேள்வி – ஒரு நீதியரசர் என்ற முறையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய ஒரு கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. குறித்த ஒரு தினத்தில், நேரத்தில், குறித்தவர்களின் முன்னிலையில் , குறித்த ஒருவர் முன்னிலையில் இவர்கள் பாரப்படுத்தப்பட்டனர். அதற்கு சாட்சிகள் இருக்கின்றன. அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர்களுக்கு என்ன நடந்தது என்று அந்த இடத்திலிருந்து விசாரணை நடத்தி எங்களுக்கு சொல்ல வேண்டும். அவர்கள் நிலத்தின் அடியில் இருக்கின்றார்கள் என்று கூறமுடியாது. அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறமுடியாது. குறித்த ஒரு இடத்தில் அவர்களை ஒப்படைத்தோம். அந்த இடத்திலிருந்து அவர்களை என்ன செய்தீர்கள்? இதற்குரிய பதிலை நீங்கள் தரவேண்டும்.

இது தொடர்பான குற்றவியல் விசாரணையை பாரபட்சம் இல்லாமல் ஒரு சர்வதேச ரீதியாக நடத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. காணாமல் போனோர் அமைப்புகளின் செயற்பாடுகளில் ஒரு பிரயோசனமும் இல்லை. அத்துடன் குற்றவாளி என கண்டால்கூட ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு இழுத்தடித்த வண்ணம் இருப்பார்கள். ஆகவே ஒன்றுமே நடக்காது. சர்வதேச ரீதியாக நடைபெறும் குற்றவியல் விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எனது கருத்து.