அனைத்துலக விசாரணையின் அவசியத்தை அனைத்துலக சமூகம் உணரத் தலைப்பட்டுள்ளது.

27

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து வெளியேறத் திட்டமிட்ட சிறீலங்கா அரசு அதற்கான எதிர்விளைவுகள் அனைத்துலக மட்டத்தில் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டது.

சிறீலங்காவின் அறிவிப்புக்கு எதிராக மேற்குலக நாடுகள் பல தமது எதிர்ப்புக்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. பிரித்தானியா மற்றும் கனடா உட்பட ஐந்து நாடுகளைக் கொண்ட இணைஅனுசரணை நாடுகள் தமது கவலையை வெளியிட்டதுடன், தீர்மானத்தை தாம் தொடர்ந்து பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளன.

இந்த நாடுகளின் வரிசையில் தற்போது பிரான்ஸ்ம் இணைந்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா விலகினாலும், தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் தனது கவலையை வெளியிட்டுள்ள அதேசமயம், அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் அது தனது கருத்தை தெரிவித்துள்ளது.

மேற்குலக நாடுகள் ஒருபுறம் தமது கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் அனைத்துலக மன்னிப்புச் சபை ஒரு படி மேலே சென்று அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் விரும்புவதும் அதுவே.

அதாவது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியது போல சிறீலங்காவின் உள்ளக விசாரணை என்பது உலகினால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. அதாவது சிறீலங்காவின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அங்கு ஒருபோதும் உள்ளக விசாரணைகளோ அல்லது பொறுப்புக்கூறல்களோ வெற்றி பெற்ற வரலாறு இல்லை.

அதற்கான முக்கிய காரணம் அங்கு நிலவும் அரசியல் ஒடுக்குழுறைகள், சுதந்திரமற்ற நீதிப் பொறிமுறை, கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை என்பவற்றை குறிப்பிடலாம். எனவே அனைத்துலகத்தின் தலையீடுகள் இன்றி சிறீலங்கா அரசும் அதன் படையினரும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மீதான நீதி விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்பது தமிழ் மக்களின் ஆணித்தரமான கருத்தாக இருக்கின்றது.

அதனையே தற்போது அனைத்துலக சமூகமும் மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளது. சிறீலங்காவில் வாழும் பௌத்த சிங்கள மக்கள் தவிர்ந்த ஏனைய இனங்களின் இயல்பான வாழ்வு தொடர்பான ஒரு உடன்பாட்டை கூட உள்நாட்டில் நிறைவேற்ற முடியாத நிலையே அங்கு காணப்படுகின்றது.

அதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவின் 13 ஆவது திருத்தச்சட்டம், அது தற்போது உள்ள நிலை, அதனால் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் நிலை என்பவற்றை நாம் இங்கு குறிப்பிடலாம்.

அதாவது, சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு, அதன் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பான விசாரணைகள், அதற்கான நீதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால். அதற்குரிய ஒரு வழி அனைத்துலக விசாரணை மட்டும் தான்.

அதனை தற்போது அனைத்துலக சமூகம் உணரத்லைப்பட்டுள்ளது. எனவே இந்த புரிதலை வலுப்படுத்தி சிறீலங்கா அரசு மீது அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கான சூழ்நிலை ஒன்றை உருவாக்க தமிழ் மக்கள் அனைவரும் ஒரு அணியில் பணியாற்ற வேண்டும்.

தமிழ் இனம் தன்னிடம் உள்ள கல்வி வளம், இராஜதந்திரத் தொடர்புகள், அரசியல் தொடர்புகள், நிதி வளம், மனித வலு, இளைய சமூகத்தின் சக்தி என்பவற்றை ஒருங்கிணைத்து மிகப்பெரும் ஜனநாயக போர் ஒன்றுக்கு தம்மை அனைத்துலக மட்டத்தில் தயார் படுத்தவேண்டிய காலமிது.

மின்னிதழ் – ஆசிரியர் தலையங்கம்