அதியுச்ச அதிகார அரசஅதிபர் முறையின் ஆபத்து

61

அதியுச்ச அதிகாரங்களைக் கொண்ட அரசஅதிபர் முறையின் நடைமுறைப்படுத்தலே 1978ம் ஆண்டு முதல் இன்றுவரை சிறிலங்காவில் மனிதஉரிமைகளுக்கும் மக்கள் உரிமைகளுக்கு மான மட்டுப்படுத்தல்களுக்கும் கட்டுப்படுத்தல்களுக்குமான அதி முக்கிய காரணியாகத் திகழ்ந்து வருகிறது.

ஸ்ரீலங்காவில் தமிழர்களின் அரசியல் பணிவைப் படைபலம் கொண்டு பெறுதல் என்பது சிங்கள பௌத்த பேரினவாதச் சிங்கள அரசியல் தலைமைகளின் ஏகோபித்த தீர்மானமாக மாறிய பொழுது தமிழ் மக்களின் மனிதஉரிமைகளையும் மக்கள் உரிமைகளையும் பாதுகாக்கக் கூடிய சட்டப்பாதுகாப்புகளை சட்டவாக்கங்கள் மூலம் மறுக்கவும் நிர்வாகத்தின் மூலம் அழிக்கவும் சட்டஅமுலாக்கத்தை நீதிமுறைகள் மூலம் எதிர்க்கவும் அனுமதியாது சட்டத்தின் ஆட்சியைச் சிங்கள பௌத்த பேரினவாதத்தையே சிறிலங்கா அரசின் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் சட்டங்களாகவும் செயற்படுத்துவதற்குச் ஸ்ரீலங்காவின் அரசஅதிபருக்கு அதியுச்ச அதிகாரங்கள் தேவை என்று சிங்கள மக்களுக்குக் காரணம் கற்பித்தே இந்த அதியுச்ச அரச அதிபர் முறையினைச் சிங்களத்தலைமைகள் கொண்டு வந்தன.

இந்த அதியுச்ச அரசஅதிபர் முறையின் முதற்செயற்பாடாகவே கண்ட இடத்தில் சுடும் அதிகாரமும் சுட்ட உடலத்தில் விசாரணையின்றி அழிப்பதற்கான அதிகாரமும் சிறிலங்காவின் படைத்துறைக்கு வழங்கப்பட்டது. இந்த அப்பட்டமான மனிதஉரிமை மீறல் அதிகாரத்தாலேயே சிறிலங்காவில் தமிழர்கள் இனஅழிப்புக்கு வகைதொகையின்ற pஉள்ளானமை உலகவரலாறாக உள்ளது.

அத்துடன் தமிழர்கள் இனஅழிப்புக்கான நீதியையோ அல்லது இனஅழிப்பின் வழியான வாழ்வியல் பாதிப்புக்களுக்கான புனர்வாழ்வு புனர்நிர்மாணத்தையோ பெறுகின்ற சட்டஆட்சி உரிமையைக் கூடப் பெற இயலாதவர்களாக பாதிப்புற்ற தமிழர்கள் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை சிறிலங்காப்படையினருக்கு தாங்கள் விரும்பியவாறு எந்த மனிதஉரிமை மீறலையும் செய்வதற்கான மனபலத்தையும் உடல் உற்சாகத்தையும் சிறிலங்கா அரசஅதிபர்க்கான அதியுச்ச அதிகார முறைமை தோற்றுவித்தது என்பதற்கு இன்றுவரை சான்றுகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

இதன் கொரோனோ தொற்றுக்கால மிகச்சிறந்த உதாரணமாகத் தான் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிய தமிழர்களை இனஅழிப்புச் செய்த சிறிலங்கா இராணுவக் குற்றவாளியினை இன்றைய அரசஅதிபர் கோத்தபாயா கருணைநிலை விடுதலைக்கு உள்ளாகியது அமைகிறது. இத்தகைய தமிழினத்திற்கு எதிரான எண்ணிறந்த மனிதஉரிமை மீறல்களையும் மக்களள் உரிமை மீறல்களையும் தங்கள் இனநலமாகக் கருதி மகிழ்ந்திருந்த சிங்கள மக்கள் தற்போது தேர்தல் நடாத்தும் நடைமுறையில் சிறிலங்கா அரசஅதிபர் தனது உச்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தலை அரசியலமைப்பு வரையறைத்த வரைமுறைகளை மீறி யூன் 20ம் திகதி நடாத்தப் போவதாக அறிவித்த உடன் தான் இது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் வரை போர்க்கொடி தூக்க முயல்கின்றனர்.

கலைக்கப்பட்ட பாராளமன்றத்தைக் கூட்டி முடிவு எடுக்கும்படி பாராளமன்றத்தின் சட்டவாக்க உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுக்க முற்படுகின்றனர். இவைகள் சட்டவாட்சி மீதான நம்பிக்கையை மீள்நிறுவும் முயற்சி என்பதற்கு அப்பால் தங்கள் தங்கள் அதிகாரங்களை இழந்து விடக்கூடாதென்ற சிங்களக்கட்சிகளின் அரசியல் நடவடிக்கையாகவே காணப்படுகிறது.

ஸ்ரீலங்காவில் ஒவ்வொரு தேர்தல்களுமே தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் சுயாதீனமாக சுதந்திரமாகத் தங்கள் விருப்பை வெளிப்படுத்த முடியாத பல்வேறு படைபல அழுத்தங்களுடனும் படைபல ஆதரவைப் பெற்ற தமிழ் வேட்பாளர்களின் மேலாண்மைகளுடனுமே நடாத்தப்பட்டு வருகின்றன என்பதே உலகறிந்த உண்மை. தமிழர்கள் மீதான இந்த நிலைமை மாறாத வரை சிறிலங்காவின் அரசியலமைப்பை விட சிறிலங்கா அரச அதிபரின் அதியுச்ச அதிகார ஆட்சியின் ஆபத்து என்பது சிறிலங்காவில் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனை சிங்களவர்களுக்கு மட்டுமல்ல உலகநாடுகளுக்கும் உலக அமைப்புகளுக்கும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாகப் புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர்.

-இலக்கு மின்னிதழ் ஆசிரியர் தலையங்கம்-