அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளில் பெரும் வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்த மக்களாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் யானைகளின் தாக்குதலிலும் இழப்புகளை எதிர் நோக்குகின்றனர்.

போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் ஏனையவர்களைப் போல் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. என்றாலும் தானும் தனது குடும்பமும் என அன்றாடம் உழைத்தே வாழ்நாளைக் கடத்துகின்றனர்.

பல்வேறு வளங்களைக் கொண்டிருந்தாலும், வேளாண்மைச் செய்கைக்கு பெயர்போன இந்தப் பிரதேசம் வரலாறு காணாத பேரழிவுகளை சந்தித்திருக்கின்றது. இவற்றை எல்லாம் கடந்து தற்போதைய சூழ்நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசங்களும் அழிவுகளும் இவர்களை விட்டபாடில்லை.

எல்லையோரக் கிராமங்களான பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை, நெல்லிக்காடு 35ஆம், 37ஆம், 38ஆம், 39ஆம், 40ஆம் கிராமங்கள், விவேகானந்தபுரம், திக்கோடை, தும்பங்கேணி, இளைஞர் விவசாயத் திட்டம், களுமுந்தன்வெளி புன்னக்குளம், இறாணமடு போன்ற கிராமங்களிலேயே யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

யுத்த காலத்தில் எதுவித யானைப் பிரச்சினையையும் எதிர் கொள்ளாத இப்பகுதிகள் யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில் இருந்து தொடர்ச்சியான யானை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.

போரதீவுபற்று பிரதேச செயலகப் பகுதிகளில் யானையின் தாக்குதல்கள் காரணமாக சுமார் 1000ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 15ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன்  20ற்கும் மேற்பட்டவர்கள் தமது அவயங்களை இழந்துள்ளனர்.

போரதீவுபற்று பிரதேசத்தில் 43 கிராமசேவையாளார் பிரிவுகளில் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். விவசாயத்தினையும் கால்நடை வளர்ப்புகளையும் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள இங்குள்ள மக்கள், வீட்டுத் தோட்டம், கைத்தொழில், கோழி வளர்ப்பு, செங்கல் அரிதல், கூலிவேலை செய்தல் போன்ற இதர தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி தொடக்கம் மாசி மாதம் வரையான காலப் பகுதிகளில் பெரும்போக வேளாண்மைச் செய்கை, தோட்டச் செய்கை என்பனவற்றை பரந்த அளவிலும் , சித்திரை தொடக்கம் ஆடி மாத காலப் பகுதிகளில் சிறுபோக வேளாண்மைச் செய்கையை குறைந்த அளவிலும் இந்தப் பிரதேச மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மேற்கொள்ளும்  அவர்களின் வாழ்வாதாரத்திற்கு காட்டு யானைகளால் தற்போது பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இங்குள்ள சிங்கள பகுதிகளில் யானைகளின் பிரச்சினைகளினால் அப்பகுதி சிங்கள மக்கள் பாதிக்கப்படாத நிலையில், தமிழ் பகுதிகளே யானையின் தாக்குதல்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் 35ஆம் கிராமத்தினைச் சேர்ந்த ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ரஞ்சன் என்பவர் இவ்வாறு கூறுகின்றார்.

“நாங்கள் எமது கிராமத்திலிருந்து சுமார் 10 தடவைகளுக்கு மேல் இடம் பெயர்ந்து பற்பல இடங்களில் வாழ்ந்து இறுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு மீளக் குடியமர்ந்துள்ளோம். பெருமளவிலான உயிர், உடமை இழப்புகளை எதிர் கொண்டுள்ளோம். தற்போது நாம் காட்டு யானைகளால் அவ்வாறான இழப்புகளை சந்தித்து வருகிறோம்.

இதுவரை எமது பகுதியில்  12 நபர்களை காட்டு யானைகள் அடித்துக் கொன்று இருக்கின்றன. 50இற்கு மேற்பட்ட வீடுகள் யானைகளினால் முற்றாக உடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலமை தொடருமாக இருந்தால், நாங்கள் யுத்த காலத்தில் எவ்வாறு இடம் பெயர்ந்தோமோ அது போல் காட்டு யானகளுக்கும் பயந்து இடம் பெயர வேண்டிய  நிலை  ஏற்படும்” என தனது மன ஆதங்கத்தை மிகவும் தெளிவாக  எடுத்துரைத்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த கோ.பிரசாத் இவ்வாறு கூறுகின்றார்.

“நாங்கள் தற்போது யானைகளின் அட்டகாசத்தினால் படும் பாடுகளைப் பற்றி பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் திணைக்களம், அரசாங்க அதிபர் போன்ற பலருக்கும் அறிவித்தும் எமக்குரிய பயன் இதுவரை  கிட்டவில்லை.

நாங்கள் கோருவது யானைகள் கிராமத்திற்குள் உட்புகும் மையப் பகுதிகளைச் சுற்றி மின் வேலிகள் அமைத்துத் தர வேண்டும் என்பதுவேயாகும். ஆனால் வனஜீவராசிகள் திணைக்களம் இங்கு வந்து எம்மிடம் நான்கு ஜந்து யானை வெடிகளைத் தந்து விட்டுச் செல்கின்றார்கள். இவவற்றை நாங்கள் பயன்படுத்தினாலும் யானைகள்   எந்த பிரதிபலிப்பையும் காட்டுவதில்லை.  இவற்றால் எந்த பயனுமில்லை.

இது இவ்வாறிருக்க, இப்பிரதேசம் வேளாண்மைச் செய்கைக்குப் பெயர் போனது. இங்குள்ளவர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர் மரக்கறி தோட்டங்கள், வாழைத் தோட்டங்கள், தென்னைகள் என்பனவும் நெல் வயல்களும் மட்டுமன்றி விவசாயிகள் சேமித்து வைக்கும் நெல் மூட்டைகளையும் கூட யானைகள் அழித்து வருகின்றன.

காட்டு யானைகளின்  தாக்குதல்களை இன்று ஏந்திக் கொண்டு நிற்கும் போரதீவுப் பற்றுப் பிரதேச மக்கள் கடந்த காலங்களில் பெரிய வெள்ளம் அதனைத் தொடர்து சூறாவளி பின் யுத்தம் இவைகளனைத்திற்கும் முகம் கொடுத்து தற்பொழுது மெல்லமெல்ல மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், “மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல” தற்பொழுது யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களின் உயிர்களையும், உடமைகளையும், குடியிருக்கும் வீடுகளையும் அழித்து வருவது மிகவும் வேதனையான விடயமே.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதே காலப் பகுதியில் 10 யானைகளும் இறந்துள்ளன எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என சுட்டிக்காட்டிய அவர், 2019ஆம் ஆண்டு யானைகளால் தாக்கப்பட்டு 10பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், இவ்வாண்டு முதல் மாதத்தில் இருவர் யானைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த மனித – யானை மோதலைத் தடுக்கும் பொருட்டு, யானைகள் வரும் வீதிகளில் மின்விளக்குகள் பொருத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். யானை வேலிகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளுக்கு அமைக்கப் பட்டுள்ளதாகவும், மிகுதி பகுதிகளுக்கும் இந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எது எப்படி இருப்பினும் இந்த அழிவு நடவடிக்கைகளை தடுப்பதற்கு உரிய கதியில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றே மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது சாமானிய மக்களின் உயிர் பிரச்சனை. அவர்களின் வாழ்வாதரப் பிரச்சனை. வனவிலங்குகளின் வாழ்வுக்கான பிரச்சனையும் கூட. எனவே உரிய அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக அக்கறை கொண்டோர் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை உடன் முன்னெடுப்பது அவசியம்.